Thursday, September 20, 2007

அமெரிக்காவில் சிவாஜி 100!

Rajini with Shreya அமெரிக்க கண்ட வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு தமிழ்ப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் சிவாஜி என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டுடன், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், வெளியான ஒரே படம் சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.

வெளியாகி 100 நாட்கள் ஆனதே தெரியவில்லை. அந்த அளவுக்கு படு வேகமாக சிவாஜி 100 நாட்களைத் தாண்டியுள்ளது.

40 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் வெளியான படம் சிவாஜி. அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ் சிவாஜி 44 மையங்களில் திரையிடப்பட்டது. இதுவரை இப்படி ஒரு படம் இங்கு திரையிடப்பட்டதில்லையாம். இது ஒரு சாதனை.

இங்கிலாந்தில், யுகே டாப் 10 பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படம் இடம் பெற்ற பெருமையை சிவாஜி நிகழ்த்தியது. இது இன்னொரு சாதனை.

இப்போது உலகெங்கிலும் சிவாஜி 100 நாட்ளைக் கடந்துள்ளது. கனடாவில் மட்டும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது ஸ்கேர்பாரோவில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர மேலும் 5 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

டொரண்டோவில் ஒரு தமிழ்ப் படம் 100 நாட்களாக ஓடிக் கொண்டிருப்பது இதுவரை இல்லாத புதிய சாதனையாம். இது சிவாஜியின் மாபெரும் சாதனை.

சிவாஜி படத்தின் உலகளாவிய விநியோகஸ்தரான அய்ங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறுகையில், இலங்கையில் 12 தியேட்டர்களில் சிவாஜி தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். சிங்கப்பூரில் 2 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்துள்ளதாம்.

ஏவி.எம் நிறுவன தலைமை செயல் அதிகாரி எஸ்.சி.பாபு கூறுகையில், தமிழகத்தில் 90 தியேட்டர்களில் சிவாஜி 100 நாட்களைத் தொட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களிலும் புறநகர்களில் 13 தியேட்டர்களிலும் 100 நாட்களைத் தொட்டுள்ளது என்றார்.

இதுதவிர பெங்களூரில் சிவாஜி 3 தியேட்டர்ளில் 100 நாள் ஓடியுள்ளது. மைசூரில் ஒரு தியேட்டரில் 100 நாட்களைத் தொட்டுள்ளது. மும்பையில் உள்ள அரோரா சினிமாஹாலில் சிவாஜி நாளையுடன் 100 நாட்களைத் தொடுகிறது.

ஏவிஎம் நிறுவன விளம்பரப் பொறுப்பாளர் அர்ஜூனன் கூறுகையில், உலகம் முழுவதும் சிவாஜி படம் 100 நாட்களைத் தொடுவது குறித்து மேலும் செய்திகளை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்:

அதேசமயம், தங்களது தலைவர் படத்தின் 100வது நாள் விழாவை சென்னையில் ரஜினி ரசிகர்கள் வானவேடிக்கை, பாண்டு வாத்தியம் முழங்க அசத்தலாக கொண்டாடினர்.

சென்னை ஆல்பட் தியேட்டரில் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. சிவாஜி பட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், எடிட்டர் அந்தோணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவையொட்டி ஆல்பட் தியேட்டர் வளாகமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதுவரை இல்லாத உற்சாகத்தில் ரசிகர்கள் காணப்பட்டனர்.

இந்த விழாவில் ஆனந்த், அந்தோணி தவிர சிவாஜியில் நடித்த சில காமெடி நடிகர்களும் கூட வந்திருந்தனர். இது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களே ஏற்பாடு செய்திருந்த விழாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியிலிருந்து ஆறரை மணிக்குள் விழா நடந்தது. விழாவுக்கு முன்பு ரஜினி படப் பாடல்களை பாண்டு வாத்தியக் குழுவினர் இசைத்து விழாவுக்கு டெம்போவைக் கூட்டினர்.

பட்டாசுகள், வான வேடிக்கைகள், ரஜினி கட் அவுட்டுக்கு ஆரத்தி, பாலாபிஷேகம் என சகல கொண்டாட்டங்களும் நடந்தேறின. திருஷ்டிப் பூசணிக்காய்களும் உடைக்கப்பட்டன. தேங்காய் உடைத்து அபிஷேகம், ஆரத்திகள் நடந்ததைப் பார்த்தபோது அது தியேட்டரா இல்லை கோவிலா என்ற சந்தேகம் பலருக்கும் வந்திருக்கும்.

ரசிகர்களுடன் அந்தப் பகுதியினரும் சேர்ந்து கொள்ள கொண்டாட்டம் களை கட்டியது. இவர்கள் தவிர அந்தப் பகுதி வழியாக போனோர், வந்தோர், பேருந்துகளில் பயணித்த பயணிளும் கூட ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து குதூகலித்தனர்.

விழாவில் பங்கேற்ற கே.வி. ஆனந்த், அந்தோணி, நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, பாலாஜி மற்றும் தியேட்டர் உரிமையாளர் மாரியப்பன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் 200 சதவீத ஒத்துழைப்பை வழங்கினார். எனது வாழ்க்கையில் சிவாஜி படத்தில் பணியாற்றியதை மறக்க முடியாது. படப்பிடிப்பு முழுவதும் ரஜினி கூடவே இருந்தார். இந்த அளவுக்கு படம் வெற்றி பெற்றது நினைத்துக் கூட பார்க்க முடியாதது, வேறு எந்தப் படத்தாலும் இதை சாதிக்க முடியாது என்றார் ஆனந்த்.

விழா முடிந்ததும் ரசிகர்கள் அனைவரும் சிவாஜி படத்தைப் பார்த்து விட்டுத்தான் வீட்டுக்குச் சென்றார்கள்.

விழாவுக்கு எல்.ஐ.சி பிரிவு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ரஜினி விசிறிகள் இணையதள சங்கத் தலைவர் சுந்தர், ராஜேஷ், நாராயணன், ஆர்க்டு ரஜினி விசிறிகள் குழுவின் சம்பத், பிரசன்னா, மது ஆகியோர் வரவேற்றனர்.

ஏவி.எம். நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தாலும் கூட ரசிகர்களின் இந்த உற்சாகத்தை அந்த விழாவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது.

சிவாஜியின் 100வது நாள் தொடர்பாக மேலும் பல செய்திகளை நாமும் தரப் போகிறோம். தொடர்ந்து படியுங்கள், என்ன?
 

No comments: