Ôமேக்கிங் ஆஃப் சிவாஜிÕ சி.டி-யாக வெளிவருகிறது.
முன்னணி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மே 17-ம் தேதி வெளிவர இருக்கிறது 'சிவாஜிÕ திரைப்படம். தென்னிந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவாஜியின் பாடல்கள் இன்று வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதும் அமோகமாக விற்று வருகிறது.
சிவாஜி படம் ஏவிஎம் நிறுவனத்தால் பல கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ மற்றும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி ஆகியவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டது. பாடல் காட்சிகளுக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதுதவிர உலக நாடுகள் பலவற்றிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் முதல் படம் இதுதான் என்று கூறப்படுகிறது.
அதனால், இந்தப் படம் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது, அதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன, எந்தெந்த அரங்கத்தை யார் நிர்மாணித்தார்கள், எப்படி நிர்மாணித்தார்கள், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது எப்படி, கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி சேர்க்கப்பட்டது. பாடல் காட்சிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த விபரங்கள் அடங்கிய சிடி தயாராகி வருகிறது.
Ôமேக்கிங் ஆஃப் சிவாஜிÕ என்ற பெயரில் தயாராகிவரும் இந்த சி.டியில் ரஜினி, ஸ்ரேயா, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், எம்.எஸ்.குகன், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வசனகர்த்தா எழுத்தாளர் சுஜாதா, கலை இயக்குனர் தோட்டாதரணி, சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன், நடன இயக்குனர்கள் பிரபுதேவா, ராஜு சுந்தரம், லாரன்ஸ். பிருந்தா ஆகியோர் தங்கள் பங்களிப்பு குறித்து பேசி இருக்கிறார்கள். இதற்காக உயர்ரக கேமராக்கள் மூலம் சிவாஜி படப்பிடிப்பு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பு ஒரு மணி நேரம் ஓடக்கூடிய அளவில் சி.டி மற்றும் டி.வி.டியாக வெளிவருகிறது. இதனை ஏவிஎம் நிறுவனமே வெளியிடுகிறது. இந்த சி.டி உலகெங்கிலும் உள்ள திரைப்பட கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர சிவாஜி தயாரானது எப்படி என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் தன் அனுபவங்களை புத்தகமாக எழுத இருப்பதாகவும், சிவாஜி திரைக்கதையும் புத்தகமாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment