`ரஜினி நடிக்கும் `சிவாஜி' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை, ஐதராபாத் நகரங்களில் வசனகாட்சிகளும், சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டது. வெளிநாட்டுக்கு சென்று பெர்லின் நகரில் ஒரு பாடலை படமாக்கி வந்தனர்.
பின்னர் புனேயில் பாடல்காட்சி எடுக்கப்பட்டது. இதில் ரஜினியுடன் நயன்தாரா ஆடியுள்ளார். ரகுவரனும் நடிக்கிறார்.
`சிவாஜி'யில் ரஜினி தந்தை, மகனாக இரு வேடத்தில் நடிக்கிறார். அப்பா, வேடத்துக்காக ரஜினி நடித்த அபூர்வராகங்கள் முதல் சந்திரமுகி வரையிலான பட ஸ்டில்களை சேகரித்து பார்வையிட்டார் இயக்குனர் ஷங்கர். அவற்றில் ரஜினி தலையில் இடது ஓரம் வகிடெடுத்து சீவி நடித்த கெட்டப் அவருக்கு பிடித்தது. அதே மாதிரி `சிவாஜி' படத்தில் தந்தை வேடத்தை உருவாக்கி உள்ளார்.
வெளி நாட்டில் பணக்காரராக வாழும் அவர் கடைசி காலத்தில் மகன் ரஜினியை தமிழகத்துக்கு அனுப்பி ஏழைகளுக்கு உதவ சொல்கிறார். அவரும் பணமூட்டையுடன் வந்து பள்ளி, கல்லூரிகள் கட்டி நன்மை செய்கிறார். மக்கள் செல்வாக்கை பெறுகிறார். இதை பொறுக்காத அரசியல் வாதிகள் ரஜினி சொத்தை பிடுங்கி ஏழையாக்குகிறார்கள். சிறையிலும் தள்ளுகிறார்கள். ரஜினி கையில் ஒரு ரூபாய் மட்டும் உள்ளது.
அதை வைத்து மனதில் தெம்பு இருந்தால் ஜெயிக்க முடியும் என்று சொல்லி மீண்டும் பணக்காரர் ஆவதுதான் கதை.
பின்னி மில்லில் பாடலுடன் இணைந்த சண்டைக்காட்சியை நூதனமாக படமாக்கினார் இயக்குனர் ஷங்கர். ரஜினி பழைய கால மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு சண்டையிடுவதும், மாதிரி இதை எடுத்தனர்.
அந்த மோட்டார் சைக்கிள்கள் மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதன் ஒரு நாள் வாடகை ரூ. 40 ஆயிரம். இதே காட்சியில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 பழங்கால கார்களும் பயன்படுத்தப்பட்டன. ஒரு காருக்கு நாள் வாடகை 9 ஆயிரம் ரூபாய்.
வெனிஸ் நகரை செயற்கையாக உருவாக்கி இந்த பாடல், சண்டைக்காட்சியை எடுத்தனர். இதற்காக 1500 வெளிநாட்டினர் அழைத்து வரப்பட்டனர். 14 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அத்தனை நாட்களும் வெளி நாட்டினருக்கு தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்கள் விரும்பிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
`சிவாஜி' படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது. ரஜினிக்கும் விசேஷ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவர் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைவதில் இருந்து படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் புறப்படுவது வரை அடையாள அட்டை அணிந்த பாதுகாவலர்கள் சுற்றி நிற்கிறார்கள். சிவாஜி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. ரஜினி அங்கே சி.பி.ஐ. அதிகாரி ஒருவரை சந்திப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
ஸ்பெயினைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சிவாஜி படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
`சிவாஜி'யில் ரஜினியும், விவேக்கும் காமெடியில் கலக்குகிறார்களாம். விமான நிலைய காட்சியொன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. ரஜினி விமானத்தில் இருந்து இறங்கி வருகிறார். அவரை வரவேற்க விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் வாசலில் நிற்கிறார்கள்.
ரஜினியை பார்த்து விவேக் வாங்க மாமா என்கிறார். பதிலுக்கு ரஜினி `டேய் என்ன பார்த்தா மாமா மாதிரியா இருக்கு, ஏன்டா என் இமேஜை எல்லார் முன்னாலயும் ஸ்பாயில் பன்றே மாப்பிள்ளைன்னு கூப்பிடுறா' என்று சிரித்தபடி சொல்வது போல் காட்சி படமானது.
படப்பிடிப்பு கலகலப்பாக நடக்கிறதாம். ரஜினி `பஞ்ச்' வசனங்களை ஸ்டைலாக பேசுவதை படப்பிடிப்பு குழுவினர் ரசிக்கிறார்கள். ஷங்கர் `கட்' என்றதும் விசிலடித்து கைதட்டுகிறார்கள்.
`சிவாஜி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழா மார்ச் 10-ந் தேதி நடைபெறலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ரஜினிபடப்பிடிப்பு தளத்திற்குள் நுழையும் போது அங்கே பாதுகாப்புக்கு நிற்கும் செக்ïரிட்டிகளுக்கு கூட பவ்யமாக வணக்கம் செலுத்துகிறாராம். இதை பார்த்து அந்த செக்ïரிட்டிகள் மலைத்து போய் நிற்கிறார்களாம்.
சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு குழுவினர் மற்றும் நடிகர்- நடிகைகள் யாரும் தங்களது உறவினர்களையோ, விருந்தினர்களையோ, செட்டிற்குள் அழைத்து வரக்கூடாது. செல்போனுடன் படப்பிடிப்புத் தளத்திற்கு யாரும் வரக்கூடாது என்பது ஷங்கர் பிறப்பித்துள்ள கண்டிப்பான உத்தரவுகள்.
இதை அறியாத ஸ்ரேயாவின் காதலன் அவரைப் பார்ப்பதற்கு சிவாஜி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை செக்ïரிட்டி உள்ளே விட மறுத்துள்ளார். ஸ்ரேயாவின் காதலன் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் உள்ளே செல்ல அந்த இளைஞருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஸ்ரேயாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அதுவும் முடியாததால் பரிதாபமாக வந்த வழியே திரும்பி போனாராம்.
சிவாஜியில் கதாநாயகி தேடுதல் வேட்டை முடிந்த பிறகு வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக விவாதம் நடந்தது.
இந்த வேடத்தில் ஏற்கனவே மக்களிடம் நன்கு அறிமுகமான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியும் ஷங்கரும் நினைத்தனர்.
சிவாஜி படத்தில் தீ படத்தில் வருவது போன்ற கெட்டப்புடன் ரஜினி தோன்றுவதால் அந்த படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த சுமனை வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தால் நான்றாக இருக்கும் என ஷங்கர் நினைத்தார்.
சிவாஜி தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளதால் ஆந்திராவில் நன்கு அறிமுகமான சுமனை சிவாஜியில் வில்லனாக்குவது பொருத்தமாக இருக்கும் என்பது ஷங்கர் கணிப்பு. இதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவிக்க உடனே சுமனை ஒப்பந்தம் செய்து உள்ளனர்.