பெங்களூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தின் நடுவே சிவாஜி படப்பிடிப்பு நடந்தது. ஆயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சக்கட்ட காட்சி
பெங்களூர் மத்திகெரே பகுதியில் எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி அருகே உள்ள மருத்துவ மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சிவாஜி படத்தின் உச்சக்கட்ட காட்சியை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கல்லூரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூடி விட்டார்கள். அப்போது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் எம்.எஸ்.ராமையா கல்லூரியில் நேற்று 2-வது நாளாக படப்பிடிப்பு நடந்தது.
ஆதி மருத்துவக் கல்லூரி
படப்பிடிப்பிற்காக எம்.எஸ்.ராமையா கல்லூரியின் பெயர் பலகை ஆதி மருத்துவக் கல்லூரி என்று மாற்றப்பட்டு இருந்தது. ரஜினிகாந்தும், விவேக்கும் காரில் வந்து கல்லூரி முன் இறங்குவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த ஒரு காட்சி மட்டும் தான் கல்லூரிக்கு வெளியே படமாக்கப்பட்டது. மற்ற காட்சிகள் அனைத்தும் கல்லூரிக்குள் எடுக்கப்பட்டது.
கல்லூரிக்குள் எடுக்கப்பட்ட படிப்பிடிப்பில் ரஜினிகாந்த் டிப்-டாப் கோட்-சூட்டுடன் கலந்து கொண்டார். "பென்ஸ்'' காரில் ரஜினிகாந்த் வலம் வரும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் சுமன் நடித்த காட்சியும் படமாக்கப்பட்டது. அவர் வேட்டி கட்டி இருந்தார். காட்சிகளை இயக்குனர் ஷங்கர் இயக்கினார்.
மிக வித்தியாசமான காட்சி
படப்பிடிப்பு நடந்த கல்லூரிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரஜினிகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மிகுந்த கெடுபிடி இருந்தது. ரஜினிகாந்த் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை தெரிவிக்க யாரும் முன்வரவில்லை.
ஆனால் நேற்று எடுக்கப்பட்ட காட்சி மிகவும் வித்தியாசமான காட்சி என்று மட்டும் தெரிவித்தார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டம்
இதற்கிடையே ரஜினிகாந்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டார்கள். கல்லூரியை சுற்றி எங்கு பார்த்தாலும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. ரசிகர்கள் கல்லூரிக்குள் நுழைய முயன்றார்கள். அவர்களை போலீசாரும், படப்பிடிப்பு குழுவினரும் தடுத்து நிறுத்தினார்கள்.
அதேவேளையில் ரசிகர்களுக்கு இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.
போலீசார் பல தடவை ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெளியே தடியடி, மோதல் நடந்து கொண்டு இருந்தாலும், கல்லூரிக்குள் அமைதியாக படப்பிடிப்பு நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காட்சிகள் படமாக்கப்பட்டன.
முல்பாகலில் இன்று படப்பிடிப்பு
இன்று (திங்கட்கிழமை) முதல் கோலார் மாவட்டம் முல்பாகலில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. 3 முதல் 4 நாட்கள் முல்பாகலில் படப்பிடிப்பு நடக்கும். பின்னர் மீண்டும் பெங்களூரில் சினிமா காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment