Tuesday, August 08, 2006

சகதியில் உருண்டார் ரஜினி காய்ச்சலால் அவதி

ஷங்கர் இயக்கும் 'சிவாஜி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடந்தது. ரஜினி, மணிவண்ணன், வடிவுக்கரசி, விவேக், ஸ்ரேயா சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
வெளிநாட்டில் பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்த ரஜினி, சென்னையிலுள்ள தன் வீட்டுக்கு வரும் காட்சி படமானது. இதற்காக டெல்லி அருகே பிரமாண்டமான பங்களா ஒன்றைத் தேர்வு செய்து, அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அடுத்து, ரஜினியை போலீஸ் ஆபீசர் சண்முகராஜன் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியும் படமானது.

தொடர்ந்து, சிறுவர்களுடன் ரஜினி சந்தோஷமாக அரட்டை அடித்த காட்சியை ஷங்கர் படமாக்கினார்.

அப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட சகதியில் ரஜினி உருண்டு புரண்டு நடித்தார். ஏற்கனவே ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' படத்தில், ஒரு காட்சியில் சேற்றில் விழுந்து நடித்தார் அர்ஜுன். அதுபோல, 'சிவாஜி' படத்துக்காக சேற்றில் விழுந்து நடித்த ரஜினி, திடீர்க் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

டெல்லியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய 'சிவாஜி' படக்குழுவினர், தற்போது பின்னி மில்லில் மிகப் பெரிய மார்க்கெட் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இங்கு, 'காதலன்' படத்தில் இடம்பெற்ற "முக்காலா முக்காபுலா" பாடலைப் போன்று உருவான ஒரு பாடல் காட்சியில் ரஜினி, ஸ்ரேயா நடித்தனர். லாரன்ஸ் நடனப் பயிற்சி அளித்தார். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்தார்.

தொடர்ந்து பீட்டர் ஹெய்ன் பயிற்சி அளிக்க, வில்லன்களுடன் மார்க்கெட் அரங்கில் ரஜினி மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்படுகிறது.

No comments: