Saturday, August 19, 2006

"இதுவரை இப்படி ரஜினியைப் பார்த்ததில்லை!’’ ஏ.ஆர்.ரஹ்மான்

 
வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவை போல அபூர்வமாக இருக்கிறது, ஏ.ஆர்.ரஹ்மானின் சென்னை வருகை!

ஹஜ் போய் வந்த அமைதியும், அமெரிக்க மியூஸிக் ஷோ ஹிட்டான ஆனந்தமுமாக இருக்கிறார் ரஹ்மான்.
 
''இப்போ இரண்டாவது தடவையா அம்மாவோடு ஹஜ் போய் வந்தேன். 'எவர் அல்லாவுக்காக ஹஜ் செய்து, அதில் துர்வார்த்தை பேசாமலும், தீமையான காரியம் செய்யாமலும் ஹஜ்ஜில் இருந்து திரும்புவாரோ, அவர் தமது தாயுடைய வயிற்றில் இருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்'னு ஹதீஸ் இருக்கு. கஃபா முன்னாடி சுத்தமான மனசோட நிக்கும்போது, என்னோட உடம்பும் மனசும் காற்றால் ஆன மாதிரி இருந்தது. அதிகாலையில் சுத்தமான நதியில் குளிச்சு எழுந்த மாதிரியான அற்புத அனுபவம் அது. அந்த வாய்ப்பு எனக்கு ரெண்டு தடவை கிடைச்சது இறைவன் அருள்தான். என்னோட வாழ்க்கையில் இப்போ நிறைய மாற்றங்கள் வந்திருப்பதை உணர்கிறேன்!''

''உங்களுடன் வேலை பார்க்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் யாருடன் வேலை பார்க்க ஆசைப்படு வீர்கள்?''

''திறமையான மனிதர்களுடன் நிறைய வேலை பார்க்கணும்னு ஆசை இருக்கு. இப்போ இந்தியில், சேகர் கபூர், மணிரத்னம்னு ஓடிட்டு இருக்கேன். பீரியட் ஃபிலிம் பண்றது ஒரு சவால். அதிலும் இரண்டு வகை இருக்கு. சில படங்கள் நிஜ பீரியட் ஃபிலிமா பண்ணு வாங்க. சில முயற்சிகளில் காலம் மட்டும் மாறும். மற்றபடி கதை, இசையெல்லாம் புதுசா இருக்கும். நிஜ பீரியட் ஃபிலிம்தான் பயங்கரமா வேலை வாங்கும். அது கிரியேஷன் மட்டுமில்லை, ஒரு காலத்தின் ரீ& கிரியேஷன். 'லகான்' டைப் படங்கள் பண்ணணும்னு அமீர்கான் விரும்புவார். 'குரு' முடிச்சதும் மறுபடியும் மணிரத்னம் டைரக்ஷனில், அமீர்கானுடன் ஒரு படம் பண்றேன். நல்லா வரும்!''

''அப்புறம், 'சிவாஜி'யில் என்ன ஸ்பெஷல்?''

''அதான் ரஜினி, ஷங்கர்னு அதில் நிறைய ஸ்பெஷல்ஸ் இருக்கே! என்னோட பங்களிப்பா, பாடல்கள் பவர்ஃபுல்லா வரணும்னு கவனம் செலுத்தறேன். வழக்கமான ரஜினி படங்களில் ஒரு ஓபனிங் சாங்... அட்வைஸ் பாட்டு வருமே, 'அப்படி இருக்கணும்... இப்பிடி இருக்கணும்'னு. அந்த டைப் பாட்டு 'சிவாஜி'யில் கிடையாது.

அஞ்சு பாட்டு. எல்லாமே என்டர் டெய்ன்மென்ட் ரகம். ஃப்ரெஷ்ஷா பண்ணியிருக்கோம். ஷ¨ட் பண்ணின ரெண்டு பாட்டை ஷங்கர் எனக்குப் போட்டுக் காட்டினார். விஷ§வல்ஸ் பார்க்க அவ்ளோ அழகா, சந்தோஷமா இருந்துச்சு. இதுவரைக்கும் இப்படி ஒரு ரஜினியை நான் பார்த்ததில்லை. 'சிவாஜி'யில் அவ்ளோ அழகா இருக்கார் ரஜினி சார்!''

''ரைஹானா, பிரகாஷ்னு உங்க குடும்பத்தில் இருந்தே மியூஸிக் டைரக் டர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்களே?''

''எங்க அப்பா நல்ல மியூஸிக் டைரக்டரா வரணும்னு ஆசைப்பட்டவர். ஆனா, வெளிச்சத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே இறந்துபோயிட்டார். இப்போ அவரோட குடும்பத்தில் இருந்து நான், என் தங்கை, தங்கை பையன்னு அடுத்தடுத்து மியூஸிக் பண்ண வர்றது நிச்சயமா நல்ல விஷயம்.

அப்புறம், நானும் புதுசா வேற ஒரு முயற்சியில் இருக்கிறேன். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைத் தொகுத்து ஒரு ஸ்ப்ரிச்சுவல் மியூஸிக் ஆல்பம் பண்ற முயற்சி. கவிஞர் அப்துல் ரஹ்மான்தான் பாடல்களைத் தொகுத்துத் தர்றார். இதில் நான் ஒரு புரொடியூசர் மட்டும்தான். தட்சணாமூர்த்தி மியூஸிக் பண்றார். ஒரு பாட்டு மட்டும் நான் பாடியிருக்கேன். வேலைகள் நடந்துட்டு இருக்கு!''

''குட்டி ரஹ்மான்களைப் பத்திச் சொல்லவே இல்லையே?''

''சூப்பரா இருக்காங்க! கதீஜா, ரஹிமான்னு எனக்கு ரெண்டு பொண்ணுங்க. கதீஜா... தேர்ட் கிளாஸ். ரஹிமா... ஃபர்ஸ்ட் கிளாஸ். மூணாவதா இப்போ கடைக்குட்டி அமீன் சார். கதீஜாவும் ரஹிமாவும் மும்பையில் இருக்கிற குலாம் முஸ்தபாகிட்டே ஹிந்துஸ்தானி மியூஸிக்கும் பியானோவும் கத்துக்கறாங்க. இதுக்காக குலாம் முஸ்தபாவும், அவரோட பையனும் அப்பப்போ இங்கே சென்னைக்கு வந்து கிளாஸ் எடுக்கிறாங்க.

ஒரு அப்பாவா எனக்கு பொறுப்பு அதிகமாகுது. கண்ணு முன்னாடி பசங்க கடகடன்னு வளர்றாங்க. சாட்டிங், ஆன் லைன்ல அப்பப்போ பார்த்தாலும், பேசினாலும், மடியில் அள்ளிப்போட்டுக் கொஞ்சினாத்தானே மனசு ஆறுது!''

''ஹாரிஸ், யுவன்னு அடுத்த தலைமுறை மியூஸிக் டைரக்டர்கள் வந்துட்டாங்க. அவர்களோட மியூஸிக் எப்படி இருக்கு?''

''நிறைய மாற்றங்கள்! இசை, ஒளிப் பதிவு, ஆர்ட் டைரக்ஷன், எடிட்டிங்னு எல்லா லெவல்களிலும் ஃபிலிம் மேக்கிங் மாடர்னாகிட்டே வருது. நல்ல குவாலிட்டிக்காக மெனக்கெடுறாங்க. யெஸ், ஹாரிஸ§ம் யுவனும் நல்லா பண்றாங்க. இப்போ இருக்கிற சினிமா மியூஸிக் அத்தனையும் வெஸ்டர்ன் டைப்பில் இருக்கு. இதோட அடுத்த கட்டம் நம்ம கலாசாரத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி வளரணும். மாடர்ன் டிரெண்டும் வேணும், நம்ம கலாசாரத்தையும் பேலன்ஸ் பண்ணணும்.

தமிழ் சினிமா ரொம்ப நல்லா இருக்கு. போல்டான கதைகள் வருது. குறிப்பா, செல்வராகவன் பிரமாதமா பண்றார். இந்தியில் நானும் அவரும் சேர்ந்து 'மேக்பெத்'னு ஒரு படம் பண்ணலாம்னு பேசியிருக்கோம்.''

''பாம்பே ட்ரீம்ஸ், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் என ஸ்டேஜ் டிராமாவுக்கு இசையமைத்த அனுபவம் எப்படி இருந்தது?''

''டிராமா மியூஸிக்ல நான் நிறையக் கத்துக்கிட்டேன். சினிமாவைவிட அதில் சவால்கள் அதிகம். ஆயிரக் கணக்கான ஆடியன்ஸை முன்னாடி உட்காரவெச்சுக்கிட்டு, லைவ்வா நம்ம திறமையைக் காட்டணும். உண்மையா பாடணும், ஆடணும், டயலாக் பேசணும். அதெல்லாம் ஆடியன்ஸைக் கவரணும். சினிமா இப்போ சிட்டியில் ஓடலைன்னா, பி, சி சென்டர்ல ஓடிட்டு இருக்குன்னு சமாதானம் சொல்வாங்க. ஆனா, ஒரு டிராமா பிடிக்கலைன்னா, காலி! ஆடிட்டோரியத்தில் கண் முன்னாடி எல்லாரும் எழுந்து போயிடுவாங்க. அவ்வளவு ரிஸ்க்கான, ரியல் ஆர்ட்! பெரிய பெரிய ஹாலிவுட் நடிகர்கள் இந்த மாதிரியான ஸ்டேஜ் டிராமாவில் வந்து நடிக்கிறாங்க. அதைப் பெரிய கௌரவமா நினைக்கிறாங்க. அந்த மாதிரியான ஒரு இடத்துக்குப் போய் வந்ததை நல்ல விஷயமா நினைக்கிறேன். பர்சனலா எனக்குள் தன்னம்பிக்கை கூடியிருக்கு!''

''தமிழ் சினிமா, இந்தி சினிமா, டிராமான்னு ஓடிட்டே இருக்கீங்க, ஏதோ தேடிட்டே இருக்கீங்களே... உங்களுடைய தேடல்தான் என்ன?''

''தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொஞ்சம் நல்ல பேர் வாங்கியாச்சு. இந்தி வாய்ப்புகள் வந்ததால், அங்கே போனேன். சினிமா சேலஞ்சிங்கா இருக்கு, அதில் நல்லா பண்ணிட்டு இருக்கோம்னு ஒரு சந்தோஷம் இருந்தாலும், ஒரு கட்டத்துல அதுவே எனக்குப் போரடிக்க ஆரம்பிச்சுது. மொத்தம் அஞ்சு பாட்டு... ஒரு ஹீரோ சோலோ சாங், இல்லைன்னா ஹீரோயின் சோலோ சாங், டூயட் சாங், அப்புறம் சோகப் பாட்டு, அப்புறம் ஃபாஸ்ட் நம்பர்னு எல்லாப் படங்களும் ஒரே மாதிரியான ஃபார்முலாவா இருந்தது. அதனால, அடுத்த ஸ்டேஜ் என்னன்னு தேட ஆரம்பிச்சப்போ, கிடைச்ச வாய்ப்புதான்... ஸ்டேஜ் (சிரிக்கிறார்)! நினைச்ச மாதிரியே இரண்டு வருஷமும் மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்தது!''

''இவ்வளவு பெரிய உயரம் தொட்ட ரஹ்மானுக்குக் கிடைக்காத பொருள் என்று ஏதாவது இருக்கிறதா?''

''(யோசிக்கிறார்) எல்லாருக்குமே எல்லாமே கிடைக்காதில்லியா... அப்படி யோசிச்சா, அதிலேயே நின்னுடுவோம். அப்புறம், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவே முடியாது. எனக்குக் கிடைச்ச இவ்வளவும் கடவுளோட பரிசு. யாருக்கு எதைக் கொடுக்கலாம், எதைத் தடுக்கலாம்கிறது அவருக்கு நல்லாத் தெரியும்!'' & இடது நெஞ்சில் தன் வலது கை வைத்துச் சொல்கிறார் ரஹ்மான்.

''எல்லாப் புகழும் இறைவனுக்கே!''  
  
 
எஸ். கலீல்ராஜா
படங்கள்: எம்.வெங்கட்ராம்
 

No comments: