சிவாஜி படத்தைத் திரையிட தமிழகத்தில் உள்ள அத்தனை பிரபல தியேட்டர்களும் போட்டி போடுவதால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க, ஏவி.எம் தயாரிக்க உருவாகியுள்ள சிவாஜி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகவுள்ளது. அடுத்த மாதம் பாடல்களை ரிலீஸ் செய்கிறார்கள்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள சிவாஜி குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டுள்ளது. சிவாஜியை தங்களது தியேட்டர்களில் போட தியேட்டர்களிடையே பெரும் போட்டி நிலவுகிறதாம்.
சிவாஜி படத்துக்கு 500 பிரிண்டுகள் வரை போடப்படுகிறது. படத்தின் விநியோக உரிமையைப் பெறுகிறவர்கள், தங்களது பகுதிக்குள் எத்தனை தியேட்டர்களில் வேண்டுமானாலும் படத்தைப் போட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதாம்.
சென்னை மாநகரில் 12 தியேட்டர்களில் சிவாஜியை ரிலீஸ் செய்யவுள்ளனராம். மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் குறைந்தது நான்கு தியேட்டர்களில் படம் திரையிடப்படுமாம்.
தமிழகத்தில் உள்ள அத்தனை பிரபல தியேட்டர்களும் சிவாஜியை வாங்க கடுமையாக மோதுகின்றன. இதனால் பிற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. சில படங்களை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
சந்திரமுகியைப் போலவே, சிவாஜிக்கும் விளம்பரம் மூலம் வசூல் பார்க்கத் திட்டமிட்டுள்ளார்களாம். சிவாஜி பட டிரைலர், ரிங்டோன்கள் செல்போன்களில் கலகலக்க உள்ளன. எல்லா டிவிகளிலும் சிறப்பு டிரைலர்களை ஓட்டவுள்ளனர்.
இதுதவிர ரஜினி, ஷங்கர் ஆகியோரின் சிறப்புப் பேட்டிகளையும் டிவிக்களில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனராம்.
படத்திற்குப் பெரிய அளவில் பிசினஸ் ஆகலாம் என்பதால் விளம்பரங்களுக்காவும் கணிசமான தொகையை ஒதுக்கி அமர்க்களப்படுத்தப் போகிறார்களாம்.
No comments:
Post a Comment