சிவாஜி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை பிரபல அபிராமி திரையரங்க குழும நிர்வாக இயக்குநர் அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.
சென்னை நகரில் முதல் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தை உருவாக்கியவர் அபிராமி ராமநாதன். பல புதுமைகளை தனது அபிராமி குழும திரையரங்கங்களில் புகுத்தியவர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக டிடிஎஸ். வசதியை தனது தியேட்டரில் ஏற்படுத்தினார். குருதிப்புனல் படத்துக்காக, கமலின் வேண்டுகோளுக்கு ஏற்ப டிடிஎஸ் வசதியை தனது தியேட்டர்களில் செய்தார் அபிராமி.
இவரது அபிராமி மெகா மால், சென்னை நகரின் பிரமாண்ட மல்ட்டிபிளக்ஸ்களில் ஒன்றாக திகழ்கிறது. சென்னை மாநகர திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவராகவும் அபிராமி ராமநாதன் உள்ளார்.
தற்போது சென்னை நகரில் சிவாஜியை திரையிடும் உரிமையை அபிராமி வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அபிராமி நமக்காக அளித்த ஸ்பெஷல் பேட்டியில், நான் சிவாஜி படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் சமீபத்தில் ஏவி.எம். நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன்.
எனது 30 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் இப்படி ஒரு அமர்க்களமான, கலர்புல் புகைப்படங்களை, நான் பார்த்ததில்லை. என்ன ஒரு செட், என்ன ஒரு ஸ்டைல். தமிழ்த் திரையுலக வரலாற்றில் சிவாஜி மிகப் பெரிய சாதனை படைக்கும். வரலாறு படைக்கும் என்றார் அபிராமி.
விநியோக உரிமை எவ்வளவு ரூபாய்க்குப் போனது என்பதை அபிராமி தெரிவிக்கவில்லை. ஏவி.எம். சரவணனும், அபிராமி ராமநாதனும் நீண்ட கால நண்பர்கள் என்பது நினைவிருக்கலாம்.
சிவாஜி படத்தின் உரிமையை அபிராமி பெற்றுள்ளது சென்னை திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment