Sunday, May 20, 2007

Distributors Angry On Shankar !!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதிக்கு படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மே 31ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம் ஜூன் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டதாம்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாகும் என கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியபோதே தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் அறிவித்தார். ஆனால் திட்டமிட்டபடி தமிழ்ப் புத்தாண்டுக்குப் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இதையடுத்து மே இறுதிக்குள் படம் நிச்சயம் ரிலீஸாகி விடும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்ளுக்கு முன்பு ஏவி.எம். நிறுவனம் ஒரு பத்திரிக்கைக் குறிப்பை வெளியிட்டது. அதில், மே 31ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏவி.எம். நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தேதியைக் குறித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் சந்தோஷம் அடைந்தனர். தமிழகமெங்கும் சிவாஜியின் வருகையை பிரமாண்டமாக வரவேற்க ரசிகர்கள் ஆயத்தமாக ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் திடீரென பட ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது ஏவி.எம். ஜூன் 15ம் தேதி படம் ரிலீஸாவதாக குறிப்பிட்டு பத்திரிக்கை விளம்பரம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படம் ஏன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தை ஏவி.எம் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் திடீரென போட்டுள்ள விற்பனை நிபந்தனை மற்றும் கர்நாடகத்தில் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவையே படத்தை தள்ளி வைக்க முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கர்நாடகத்தில் சிவாஜியை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடாவுடன் சிவாஜி ரிலீஸ் தொடர்பாக ரஜினிகாந்த் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே ரஜினிக்கு கர்நாடகத்திலும் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் சிவாஜியை திரையிடக் கூடாது. மீறித் திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கெளடா எச்சரித்துள்ளார். இதனால் அங்கு படத்தைத் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே ரஜினியே நேரடியாக கெளடாவை போனில் அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளாராம். இந்தப் பேச்சில் உடன்பாடு ஏதும் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இதனால்தான் படம் ஜூன் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், சிவாஜி தள்ளிப் போடப்பட்டுள்ளதால், பல விநியோகஸ்தர்கள் கோபமடைந்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் மீது அவர்கள் பாய்ந்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விநியோகஸ்தர் கூறுகையில், வழக்கமாக படத்தை இயக்கியதும், அதை வெளியிட வேண்டும். ஆனால் ஷங்கர் விஷயத்தில் இது படு மோசமாக உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக அவர் படத்தை இயக்கினார். இன்னும் படத்தை வெளியிட வழி பிறக்கவில்லை.

அவரது செயல்களால் கிட்டத்தட்ட 25 படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிவாஜி வருவதால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் இந்த 25 படங்களையும் அதன் தயாரிப்பாளர்கள் தள்ளிப் போட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

படத்தை ரிலீஸ் செய்வதில் சிவாஜி யூனிட் செய்யும் தாமதங்கள், குழப்பங்களால் ஒட்டுமொத்த திரையுலகமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, சிக்கலில் வீழ்ந்துள்ளது.

சந்திரமுகி படத்தை பி.வாசு எப்படி இயக்கினார், எப்படி அதை ரிலீஸ் செய்தார் என்பதை ஷங்கர் புரிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.

ஷங்கரின் போக்கால் சிறு தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தயாரித்த படத்தை என்ன செய்வது என்ற வேதனையில் அவர்கள் மூழ்கியுள்ளனர் என்று கொட்டித் தீர்த்தார்.

நியாயமான வேதனைதான்!


Never miss an email again!
Yahoo! Toolbar
alerts you the instant new Mail arrives. Check it out.

No comments:

Blog Archive